கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமியை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.
ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் ராமலட்சுமி.
இவரது மகள் சத்யா நேற்று(அக்டோபர் 14) பரங்கிமலை ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் ராமலட்சுமியின் கணவர் மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மயில் துத்தநாகத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரின் தந்தையும் ஓய்வுப் பெற்ற உதவி ஆய்வாளர் ஆவார். காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் நடந்த இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சத்யாவின் உடலும், அவரது தந்தை மாணிக்கத்தின் உடலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொலையான மாணவியின் தாய் காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(அக்டோபர் 14) நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஆலந்தூரில் காவலர் குடியிருப்பில் உள்ள ராமலட்சுமி வீட்டிற்கு சென்ற அவர், குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
இதேபோன்று பரங்கிமலை துணை ஆணையர் தீபக் ஸ்வாச்சும் ராமலட்சுமி இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.
கலை.ரா
நீட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு : உச்சநீதிமன்றம்!
பேச்சுப்போட்டியில் இந்தி மட்டுமே பேச அனுமதி… கடலூரில் வெடித்த போராட்டம்!