சென்னை கண் சொட்டு மருந்து : அமெரிக்காவில் ஒருவர் பலி… 5 பேர் பார்வையிழப்பு!

Published On:

| By christopher

சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் பலி மற்றும் 5 பேர் கண்பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான குளோபல் பார்மா ஹெல்த்கேர், தான் தயாரித்த செயற்கை கண்ணீர் கண் சொட்டு எனப்படும் எஸ்ரிகேர் (EzriCare) மருந்தை அமெரிக்க சந்தையில் விநியோகித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இந்த மருந்தினை பயன்படுத்திய ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்ட 11 நோயாளிகளில் 5 பேர் பார்வையை இழந்துள்ளனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.

chennai pharmas eye drops killed a american

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புகார்

இதனையடுத்து ”கண் சொட்டு மருந்து drug-resistant எனப்படும் பாக்டீரியாவால் மாசுப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தினால் நிரந்தர பார்வை இழப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் உண்டாகும் தொற்று காரணமாக இறப்பு ஏற்படலாம்.

எனவே எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் கண் சொட்டு மருந்து அல்லது டெல்சம் பார்மாவின் செயற்கை கண் சொட்டு மருந்தை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்” என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) எச்சரித்துள்ளது.

குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த செயற்கை கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) பரிசோதித்து வருகிறது.

நள்ளிரவில் திடீர் ஆய்வு

எப்டிஏவின் புகாரினைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், சென்னைக்கு தெற்கே சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

chennai pharmas eye drops killed a american

அதிகாலை 2 மணிக்கு இந்த ஆய்வு முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பி வி விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தொகுப்புகளில் இருந்து, பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம்.

அமெரிக்காவில் இருந்து மாதிரிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நான் அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்.

விசாரணை முடிவடையும் வரை கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.

மேலும், நிறுவனத்திற்கு மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் பெற்றுள்ளதும், சர்ச்சைக்குரிய மருந்து உற்பத்தியாளரான குளோபல் பார்மா ஹெல்த்கேர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் (எப்டிஏ) இணைந்து செயல்படுவதும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மருந்தை திரும்ப பெற நடவடிக்கை

இதற்கிடையே அமெரிக்க சந்தையில் இருந்து செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளை குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தானாக முன்வந்து திரும்ப பெற்று வருகிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சாத்தியமான மாசுபாடு காரணமாக, எஸ்ரிகேர் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்து, அல்லது டெல்சம் பார்மா மூலம் அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்படும் மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை உட்கொண்ட 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ரத்த காயங்களுடன் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்!

எப்படிடா இருக்க? நம்பர் ஒன் பவுலர் சிராஜை பாராட்டிய அஷ்வின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share