2025 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது. முதலில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கையுடன் அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்கியதை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
கடற்கரை, பார்க், மால்கள் என பொது இடங்களில் மக்கள் கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், கிண்டி அர்பன் ஸ்கொயர் பார்க் ஆகிய இடங்களில் நள்ளிரவு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

கிண்டி அர்பன் ஸ்கொயர் பார்க்கில், இரவு 9 மணி முதலே இளைஞர்கள் வர தொடங்கினர். புத்தாண்டை முன்னிட்டு பார்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றின் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
நேரம் ஆக ஆக பார்க் முழுவதும் நிரம்பி வழிந்தது. இளைஞர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமடைந்தனர். 12 மணி ஆனதும் அனைவரும் ஒரே நேரத்தில் ஹேப்பி நியூ இயர் என கத்தி, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறி புத்தாண்டை வரவேற்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பலரும் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிண்டி மேம்பாலத்தில் நின்று பலர் புத்தாண்டு கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்தநிலையில், சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு அறிவுறுத்தினர்.
மெரினாவை பொறுத்தவரை முதலில் கடற்கரை முழுவதுமாக காவல்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மணல் மற்றும் கடல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது. காந்தி சிலை அருகில் கடிகாரம் தூண் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வண்ண விளக்குகளால் கூண்டு அமைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘ஹேப்பி நியூ இயர்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பி, மொபைல் ப்ளாஷ் லைட்டை ஒளிரவிட்டு, கைகளை குலுக்கி, இனிப்பு வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். மக்கள் தாங்கள் கொண்டு வந்த விதவிதமான கேக்குகளை வெட்டி, மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
வானில் வர்ணஜாலம்

பெசண்ட் நகர் கடற்கரையில் ட்ரோன் காட்சிகள் நடத்தப்பட்டது. இருள் நிறைந்த வானில் வண்ண வண்ண ட்ரோன்கள் பறக்கப்படவிட்டப்பட்டன. சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், “say no to drugs” என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. இதில் ஸ்மைலி, ஹார்ட்டின், பட்டாம்பூச்சி, கிரிஸ்துமஸ் ட்ரீ வடிவில் 11.50 முதல் 12 மணி வரை 10 நிமிடங்கள் சுமார் 200 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன.
இதை கண்டுகளித்த மக்கள் 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

அதுபோன்று பெசண்ட் நகர் சர்ச், சாந்தோம் சர்ச் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. வடபழனி கோயில், கபாலீஸ்வரர் கோயில், அஷ்டலட்சுமி கோயில் என பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் நடனமாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மின்னம்பலம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா