சென்னை கோடம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வயதான தம்பதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தம்பதிகள் மூர்த்தி, பானுமதி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
மூர்த்தி வருமான வரித்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி பானுமதி தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாததால், தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 5) இரவு இவர்களது எதிர்வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, வயதான தம்பதிகள் இருவருமே இரும்பு கேட்டை பிடித்தபடி இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். உடனடியாக எதிர் வீட்டில் வசித்தவர்கள் காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வயதான தம்பதிகள் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சிறிது நேரம் தற்காலிகமாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து தம்பதிகள் இருவரது உடல்களையும் மீட்டனர்.
காவல்துறை முதற்கட்ட விசாரணையில், வீட்டு வாயிலில் இரும்பு தூணில் பொருத்தப்பட்ட மின்விளக்கிலிருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
வயதான தம்பதிகள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
காமெடியும் கிளாமரும் : காபி வித் காதல் விமர்சனம்!
குஜராத் தேர்தல்: பாஜகவுக்கு காத்திருக்கும் 10 சவால்கள்!