இரு உயிரை பறித்த கட்டடம்: அகற்றப்படாதது ஏன்?

தமிழகம்

சென்னை பூக்கடையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி துவங்கியது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. கனமழைக்கு ஏற்கனவே சென்னையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

chennai old buildings collapse two dead

இந்தசூழலில், நேற்று மாலை சென்னை சவுகார் பேட்டை மிண்ட் தெருவில் சத்ரதாஸ் என்பவருக்கு சொந்தமான பழைமையான வீட்டின் முதல் தளம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தில் மேல் தளத்தில் வீடும் கீழ்பகுதியில் கடைகளும் இருந்துள்ளன.

திடீரென நேற்று ஏற்பட்ட விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி கங்குதேவி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கட்டட விபத்தில் சரவணன், சிவக்குமார், சங்கர் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தை நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் ராஜீவ்காந்தி மருத்துவனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “2014ஆம் ஆண்டிலேயே கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் இந்த கட்டடத்தின் உரிமையாளர் கடைகள் நடத்தி வந்தவர்களிடம் உடனடியாக காலி செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

அதில் 4 பேர் காலி செய்துள்ளனர். மீதமுள்ள கடைக்காரர்கள் கீழமை நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இந்த வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது.

இதனால் கடைக்காரர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதனால் இதில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் அரசு இருந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதனிடையே கட்டிட இடிபாடுகளில் சிக்கி கவலைக்கிடமான நிலையிலிருந்த சங்கர் என்ற நபரும் உயிரிழந்தார். இதனால், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

செல்வம்

ஆலயங்களில் அறிவாலயங்களை எழுப்புவோம்! – பகுதி 4

டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *