சென்னையிலிருந்து ஒடிசாவுக்கு இன்று இரவு சிறப்பு ரயில் கிளம்பியது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 7 மணியளவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த 280க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் என பலரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண் : 02840 என்ற சிறப்பு ரயில் பத்ரக் செல்லும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 ஆவது நடைமேடையில் இருந்து இன்று இரவு 7.20க்கு சிறப்பு ரயில் ஒடிசா மாநிலம் பத்ரக்குக்கு புறப்பட்டது.
இது பயணிகள் ரயில் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் செல்லும் உறவினர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறது.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே இன்று சென்னையிலிருந்து கிளம்பியுள்ளனர்.
அவர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த சர்வேஷ் குமார் சிங் கூறுகையில், “என் தம்பி விபத்தில் சிக்கியிருக்கிறார்.
இரண்டு கால்கள் உட்பட உடம்பு முழுவதும் அடிபட்டிருப்பதாக அங்கிருந்து தொலைபேசி மூலம் சொல்கிறார்கள். இப்போது நல்லா இருப்பதாக நர்ஸ் சொல்கிறார்.
ஒரு பைக் விபத்து என்றாலே எவ்வளவு பாதிப்பு ஏற்படும். என் தம்பி ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.
அவரை பார்க்க செல்கிறேன். அங்கு போனால் தான் எப்படி இருக்கிறார் என்று தெரியும். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது” என்றார்.
அதுபோன்று மீட்புப் பணியில் ஈடுபடத் தன்னார்வலர்களும் இந்த ரயிலில் சென்றுள்ளனர். இந்த ரயில் நாளை இரவு பத்ரக் சென்றடையும்.
பிரியா
“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்!