எல்லோரும் காலைல வீட்டிலிருந்து கிளம்பினால் டிராஃபிக், ஹார்ன் சத்தம்னு பல டென்ஷன்கள கடந்துதான் பயணிக்க வேண்டியிருக்கும். வேலைக்கு லேட்டாயிடிச்சின்னு வண்டிய எடுத்துகிட்டு அவசரமா போகும்போதுதான் கரெக்டா சிக்னல்ல ரெட் விழும். என்னதான் சிகப்பு விளக்கு எரிஞ்சாலும் வேகமா முன்னாடி போகப் போற மாதிரியே பின்னாடி இருந்து ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர் ஹார்ன் அடிச்சே தலைவலிய கூட்டுவாரு. இதெல்லாம் தாண்டி ரோட்டுக்கு நடுவுல பெரிய சவுண்டோட ட்ரில் போட்டுட்டு இருப்பாங்க. அதக் கேட்கும்போது காது கிழியுற மாதிரியும், பிரஷர் ஏறுர மாதிரியும் இருக்கும். இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்…
இப்படி ஒவ்வொரு நாளும் இரைச்சல், சத்தம் இவையெல்லாம் நம் வாழ்க்கையில ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. எந்த மாநகரங்களும் சத்தமின்றியோ இரைச்சலின்றியோ இயங்குவதில்லை. ஆனால் நாம் ஏன் சத்தத்தை சாதாரணமாக கடந்து போக முடியாதென்றால், இரைச்சலின் காரணமாக சென்னையின் மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்திக்க இருப்பதாக ஒரு எச்சரிக்கையினை சென்னை ஐ.ஐ.டியின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இந்தியாவில் உள்ள பெருநகரங்களான பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதரபாத் போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை தான் அதிக ஒலி மாசு உள்ள மாநகராக இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையின் ஒலி மாசு அல்லது இரைச்சல் எந்த புள்ளிக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை சென்னை ஐ.ஐ.டி-யின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
ஒலி மாசுபாடு என்பது என்ன?
காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு பற்றியெல்லாம் நாம் நிறைய அறிந்து வைத்திருப்போம். ஆனால் ஒலி மாசுபாடு என்ன விளைவினை ஏற்படுத்திவிடும் என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம்.
ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தின் (European Environment Agency (EEA)) அறிக்கை உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறது. ஒலி மாசுபாடு காரணமாக ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுக்கு 12,000 மரணங்கள் நிகழ்வதாகவும், 48,000 பேர் இருதய நோயாளிகளாக மாறுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எல்லா வகையான சத்தங்களும் ஒலி மாசுபாடாகக் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. உலக சுகாதார நிறுவனம் (WHO) 65 டெசிபல் அளவிற்கு அதிகமான சத்தத்தினை ஒலி மாசுபாடு என்று வரையறுக்கிறது. இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) பாதுகாப்பான ஒளி அளவிற்கான வரம்பினை 70 டெசிபல் (dB(A)) என்று நிர்ணயித்திருக்கிறது.
• அந்த வகையில் 75 dB(A)-விற்கு அதிகமான சத்தம் என்பது பாதுகாப்பற்ற அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய ஒலி அளவாக அறியப்படுகிறது.
• 120 dB(A)-விற்கு அதிகமான சத்தம் என்பது மிகவும் வலிமிகுந்த மோசமான அளவாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிறுவனங்களும் உலக சுகாதார நிறுவனமும் பகல் நேரத்தில் சத்தத்தின் அளவினை 65 dB(A)-விற்குக் கீழாக பராமரிப்பதும், இரவு நேரத்தில் நல்ல தூக்கத்திற்கு 35 dB(A)-விற்குக் கீழாக பராமரிப்பதும் முக்கியமானதென பரிந்துரைக்கப்படுகிறது.
ஒலி மாசுபாடு அப்படி என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
ஒலி மாசு அல்லது இரைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் பலருக்கு சுவாசக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, தலைவலி, வாயுக் கோளாறு, செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களும், வயிற்றில் இருக்கும் சிசுக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். பிறந்து வளரும் நிலையிலுள்ள குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகளும், கவனச் சிதறல்களும், நினைவுத் திறன் குறைப்பாடுகளும் ஏற்படுவதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சத்தம் என்பது மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மனிதர்களைத் தாண்டி விலங்குகள், பறவைகள் மற்றும் சிற்றுயிர்கள் என அனைத்து வகையான உயிரினங்களும் ஒலி மாசுபாட்டினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக விலங்குகளுக்குக் கூட அதீத ஒலி மாசுபாட்டினால் மன அழுத்தமும், மனச் சோர்வும் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வு!
சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்தவர்களால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் 219 கி.மீ நீளத்திற்கான சாலைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஆட்டோக்களில் இரைச்சல் அளவினை அளவிடக் கூடிய இரண்டு வகையான மீட்டர்கள் பொருத்தப்பட்டு அவை அந்த பகுதிகள் முழுதும் சுற்றிவரச் செய்யப்பட்டன. அந்த மீட்டர்கள் முறையே ஒலியின் அழுத்தத்தினை அளவிடக் கூடிய Noise Dosimeter, ஒலியின் தன்மை மற்றும் மூலத்தினை கண்காணிக்கக் கூடிய Sound-level meter ஆகியன.
ஆட்டோக்களின் எஞ்சினில் இருந்து வெளியாகக் கூடிய சத்தத்தின் அளவு முதலில் அளவிடப்பட்டு குறித்துக் கொள்ளப்பட்டது. அடுத்ததாக ஆட்டோக்களை அந்த மண்டலங்கள் முழுவதும் இயக்கி அப்பகுதிகளின் சத்தத்தின் அளவு அளவிடப்பட்டது. மீட்டரில் காட்டப்பட்ட அளவிலிருந்து ஆட்டோ எஞ்சின் எழுப்பும் சத்தத்தின் அளவை கழித்து விட்டு, மீதமுள்ள அளவானது அப்பகுதியின் சத்தத்தின் அளவாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பரபரப்பான மணி நேரம் (Peak hours), பரபரப்பில்லாத மணி நேரம் (Non peak hours) என இரண்டு வகையான காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரபரப்பான நேரம் என்பது மாலை 5:30 மணி முதல் 7:30 என்பதாகவும், பரபரப்பில்லாத நேரம் என்பது காலை 10:30 மணி முதல் 12:30 மணி என்பதாகவும் வரையறுக்கப்பட்டது.
ஆய்வின் முடிவுகள்!
• சென்னையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பரபரப்பான நேரம் மற்றும் பரபரப்பில்லாத நேரம் என இரண்டு காலப்பகுதியிலும் இரைச்சல் அளவிற்கான வேறுபாடு என்பது வெறும் 0.8dB(A) என்பதாகவே உள்ளது. எனவே எல்லா நேரத்திலும் இரைச்சல் அளவு ஏறக்குறைய ஒரே அளவாக இருப்பதாகக் கொள்ளலாம்.
• ஆலந்தூர், அடையார், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் பரபரப்பான நேரத்தில் 85 dB(A) என்ற அளவிற்கு மேலாக இரைச்சலைக் கொண்டிருக்கின்றன. அதிக ஒலி மாசுபாடு கொண்ட பகுதிகளாக இப்பகுதிகள் உள்ளன.
• குறிப்பாக ஆலந்தூர் மண்டலத்தைப் பொறுத்தவரை விமான நிலையத்தின் இரைச்சல், சாலை போக்குவரத்து இரைச்சல் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதிகள் ஆகியவை இரைச்சலுக்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
• அடையாறு பகுதியைப் பொறுத்தவரை சாலை போக்குவரத்து காரணமாக எழுப்பப்படும் சத்தம் என்பதோடு சேர்த்து கல்வி நிலையங்களின் சத்தமும் முக்கியமான ஒன்றாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
• அம்பத்தூர் மண்டலமானது பரபரப்பில்லாத நேரத்திலும் 86.3 dB(A) அளவிற்கு அதிக இரைச்சலைக் கொண்ட பகுதியாக இருக்கிறது. அம்பத்தூர் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் இதற்கான முக்கியமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
• சென்னையிலேயே இரைச்சல் குறைவான பகுதியாக கண்டறியப்பட்டது திரு.வி.க நகர் மண்டலமாகும். பரபரப்பான நேரத்தில் 76.2 dB(A) அளவிற்கான இரைச்சலைக் கொண்டிருக்கிறது.
• மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பாதுகாப்பான ஒலி அளவாக வரையறுத்திருப்பது 70dB(A) ஆகும். சென்னையின் இரைச்சல் குறைவான பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ள திரு.வி.க. நகர் மண்டலமே இந்த பாதுகாப்பான ஒலி அளவைக் காட்டிலும் அதிக இரைச்சலைக் கொண்டிருப்பது கவலை தரக் கூடியதாகப் பார்க்கப்படுகிறது.
ஆய்வு பரிந்துரைப்பது என்ன?
• உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தின்படி ஒலி மாசு எனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியை நாம் வெல்ல வேண்டுமென்றால் முதலில் அது குறித்தான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். எனவே ஒலி மாசுபாடு என்றால் என்ன, அதனால் ஏற்படக் கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்த தொடர் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
• மாநகரம் முழுவதும் பரவலாக ஒலியை உறிஞ்சக் கூடிய வகையில் மரங்களை நடுதல் வேண்டும்.
• கட்டிடங்களின் கட்டுமானங்களில் ஒலியை உறிஞ்சி இரைச்சலைக் கட்டுப்படுத்தக் கூடிய மண் மற்றும் மரங்களை உள்ளடக்கிய ஒரு வடிவமைப்பினைக் கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைநகரத்தின் மக்கள் ஒலி மாசு மற்றும் இரைச்சலினால் சந்திக்கப் போகும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் கொள்கை அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதனை எச்சரிக்கையாக அளிக்கிறது சென்னை ஐ.ஐ.டி-யின் இந்த ஆய்வறிக்கை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
விவேக்
நான் அடிச்சா தாங்கமாட்டே… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்தா? எடப்பாடி முடிவில் மாற்றம்!