ஏழு வயது சிறுவன் மூழ்கி பலியான நீச்சல் குளத்திற்கு சென்னை மாநகராட்சி இன்று (ஏப்ரல் 6) சீல் வைத்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை கொசப்பேட்டை பட்டாளத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்குப்தா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகனான தேஜா வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
அத்துடன் பெரியமேட்டில் உள்ள மைலேடி பூங்கா நீச்சல் குளத்துக்கு கடந்த 13 நாட்களாக சென்று தேஜா நீச்சல் கற்று வந்தான்.
அதன்படி கடந்த 4ம் தேதி தனது தாத்தாவுடன் நீச்சல் பயிற்சிக்கு சென்ற சிறுவன் தேஜா, நீரில் மூழ்கி பலியானான்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பயிற்சியாளர்களான செந்தில்குமார்(37), சுமன்(31), பிரேம்குமார் (25) ஆகியோரை கடந்த 5ம் தேதி கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக சிறுவன் நீச்சல் பயிற்சி எடுத்த சென்னை பெரியமேட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மை லேடீஸ் பூங்கா நீச்சல் குளத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு அவர்களது திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு இடங்களில் கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலியான சம்பவமும், அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி எடுத்த நடவடிக்கையும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தென்னிந்திய நடிகர்களை குறிவைக்கும் பாலிவுட்!
புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் யூடியூபர் கைது!