சென்னை முகலிவாக்கத்தில் மழை நீர் பாதிக்கப்பட்ட இடங்களில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (நவம்பர் 13) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் நீர் சூழ்ந்துள்ளது.
மழை நீர் சூழ்ந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகளவு ஏற்படாத வகையில் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டர் வைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இரவு பெய்த மழையில் சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரில் இறங்கி நடந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும், மீட்பு பணி மற்றும் மழை வெளியேற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணியிலும் மழை நீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்காதது தான் மழை நீர் தேங்கி நிற்கக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகலிவாக்கம் பகுதியைப் போன்று திருவள்ளுவர் மற்றும் பெல் நகரிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இன்று (நவம்பர் 13) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வட சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், “எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது” என்றார்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: திமுக ஆட்சிக்கு எதிராக… ரகசிய கூட்டத்தில் அமித் ஷா போட்ட உத்தரவு!