சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் ‘நீலகிரி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் ஒன்று மற்றும் கட்டம் ஒன்று நீட்டிப்புக்குப் பிறகு வழித்தடம் ஒன்று மற்றும் இரண்டில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் 116.1 கி.மீ. நீளத்துக்கு மேலும் மூன்று வழித்தடங்களைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை உள்ள வழித்தடம் மூன்று 45 கி.மீ நீளம் கொண்டது. இதில் 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. இதில் வழித்தடம் மூன்றில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக ஏழு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் நீலகிரி (S-96) வழித்தடம் மூன்றில் (Up line) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினால், மாதவரம் பால் பண்ணை ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 1.4 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துவிட்டு நேற்று (ஆகஸ்ட் 7) நெடுஞ்சாலையை வந்தடைந்தது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
”ஆடை சுதந்திரத்திற்கு எல்லை வேண்டும்”: குஷ்பு
டெல்லி மசோதா: முன்னாள் தலைமை உச்சநீதிமன்ற நீதிபதி ஆதரவு!