இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தில் நாதமுனி – கொளத்தூர் வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) ஐந்தாவது வழித்தடம் ஒன்றாகும்.
இந்தத் தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், ஆறு சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
பல்வேறு இடங்களில் தூண்கள் அமைத்து உயர்மட்டப் பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதையைப் பொறுத்தவரை, கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.
இந்தப் பகுதி பாறைகளால் நிறைந்தது என அடையாளம் காணப்பட்டு உள்ளதால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் மிகவும் சவாலான பகுதியாக இது இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இங்கு சுரங்கப் பாதை அமைக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது, இங்குள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், “இந்த சுரங்கப்பாதை பணி முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் இடம்பெறும் வில்லிவாக்கம், நாதமுனி உள்ளிட்ட சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இங்கு சுரங்கப்பாதை பணி வரும் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இதுதவிர, சுரங்கப்பாதையில் இருந்து உயர்மட்டப் பாதைக்கு மாறும் விதமாக, சாய்தளப் பாதை அமைக்கும் பணி வில்லிவாக்கத்தில் இருந்து பாடிக்கு செல்லும் வழியில் பாடி மேம்பாலம் அருகே அமைக்கப்படுகிறது. 175 மீட்டர் அளவுக்கு சாய்தளப் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்
மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே? – அப்டேட் குமாரு
ஹெல்த் டிப்ஸ்: எடை குறைந்தால் மட்டும் போதாது; உட்கொள்ளும் உணவிலும் கவனம் தேவை!
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!