சென்னை மெட்ரோ முதல் கட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்கள் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
பொதுவாக ஒரு நகரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ வழித்தடங்கள் இருந்தால் அவைகளை வேறுபடுத்திக் காட்ட நிறங்களின் பெயர்களை மெட்ரோ வழித்தடங்களுக்கு சூட்டுவது வழக்கம்.
அதன்படி சென்னை விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் வரை செல்லும் வழித்தடத்திற்கு நீல நிற வழித்தடம் என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை செல்லும் வழித்தடத்திற்குப் பச்சை நிற வழித்தடம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் சென்னை மெட்ரோ திட்டம் இரண்டின் கீழ் மேலும் மூன்று வழித்தடங்கள் உருவாகி வருகின்றன.
இதில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்திற்கு ஊதா, லைட் ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வழித்தடத்திற்கு மஞ்சள், மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்திற்குச் சிவப்பு நிறம் என்று என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.
மாதவரம் – சிறுசேரி (ஊதா)
மாதவரம் பால் காலனியில் ஆரம்பித்து, செம்பியம், பெரம்பூர், அயனாவரம், பட்டாளம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி , போன்ற இடங்கள் வழியாக சிறுசேரி சிப்காட்டில் போய் முடிவடைகிறது.
இந்த வழித்தடத்தால் சிறுசேரி மற்றும் டைடல் பார்க்கில் உள்ள ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கும், மத்திய மற்றும் வட சென்னை மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
45.4 கி.மீட்டர் நீளம் உள்ள இந்த வழித்தடத்தில் மொத்தம் 47 நிறுத்தங்கள் உள்ளன.
லைட் ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் (மஞ்சள்)
லைட் ஹவுஸில் ஆரம்பித்து, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், போரூர் வழியாக பூந்தமல்லி பைபாஸுக்கு சென்றடைகிறது. 26.1 கி.மீட்டர் நீளம் உள்ள இந்த வழித்தடத்தில் மொத்தம் 27 நிறுத்தங்கள் உள்ளன.
பொதுவாக பூந்தமல்லியிலிருந்து மத்திய சென்னைக்கு வருவது மக்களுக்குச் சிரமமாக இருந்து வருகிறது. இந்த வழித்தடம் மூலம் இது நிவர்த்தி செய்யப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
மாதவரம் – சோழிங்கநல்லூர் (சிவப்பு)
மாதவரத்தில் தொடங்கி, சாஸ்திரி நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மேற்கு, கோயம்பேடு, முகலிவாக்கம், ராமாபுரம், ஆதம்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர்க்கு சென்று முடிவடைகிறது. 44.6 கி.மீட்டர் நீளம் உள்ள இந்த வழித்தடத்தில் மொத்தம் 45 நிறுத்தங்கள் உள்ளன. 2026-இல் மக்கள் பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சென்னையில் இந்திய விமானப்படை தின சாகச நிகழ்ச்சி… எப்படி பார்ப்பது ?