கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Published On:

| By Kavi

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Chennai Metro Airport-Kilambakkam extension

சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.

தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில், சிட்டிக்குள் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு பயணிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.

அதேசமயம் சென்னை மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் இன்று (பிப்ரவரி 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“ சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவானதிட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.

ரூ. 9,335 கோடி மதிப்பீடு! Chennai Metro Airport-Kilambakkam extension

திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது.

இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.

முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:

  • வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ
  • உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13
  • மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Chennai Metro Airport-Kilambakkam extension

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share