கோடையில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 58 சதவிகிதம் உள்ள நிலையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்கிற கேள்விக்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன.
இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் நிலவி வருவதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது.
இந்த ஐந்து ஏரிகளிலும் தற்போது 6.908 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவிகிதம் ஆகும்.
குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும், தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்,
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சி ஆகும். இதில் 1.135 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் விநாடிக்கு 135 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.081 டிஎம்சியில் 708 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.300 டிஎம்சியில் 2.251 டிஎம்சியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டிஎம்சியில் 2.354 டிஎம்சி தண்ணீரும் இருப்பு உள்ளது.
கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடியில் 460 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருப்பதாகத் தெரிகிறது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு புளிப்பச்சடி
ஐய, இன்னுமோர் நூற்றாண்டு இரும்!