அட நம்ம ஊர்லயும் வந்தே பாரத் ரயில் வந்துருச்சுப்பா என பலரையும் புருவம் உயர்த்த வைத்து பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 8) சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
பயணிகள் விரைவாக பயணம் செய்யும் நோக்கில் வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ரயிலானது 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. வந்தே பாரத் ரயிலுக்கான பாகங்கள் சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகிறது. 16 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகளுடன் இயங்கக்கூடிய இரு வகையான வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.
நாட்டின் 13-வது வந்தே பாரத் ரயிலை சென்னை – கோவை இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும். இந்த ரயிலானது 495 கி.மீ பயண தூரத்தை 5.50 மணி நேரத்தில் கடக்கும். விரைவு ரயிலில் பயணிப்பதை விட பயணிகளுக்கு 1.20 மணி நேரம் மிச்சமாகும். திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே ரயில் நின்று செல்லும். 8 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 530 பேர் பயணிக்கலாம்.
AC Chair Car வகுப்பில் பயணிக்க சென்னை – கோவை ரூ.1365, சென்னை -திருப்பூர் ரூ.1,250, சென்னை – ஈரோடு ரூ.985, சென்னை – சேலம் ரூ.865 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Executive Chair Car வகுப்பில் பயணிக்க சென்னை – கோவை ரூ.2,485, சென்னை – திருப்பூர் ரூ.2,325, சென்னை – ஈரோடு ரூ. 1,930, சென்னை – சேலம் ரூ.1,740 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உணவு கட்டணத்துடன் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. பயணிகள் விருப்பப்பட்டால் உணவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
காலை 6 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் (எண்.20644) ரயிலானது திருப்பூர் 6.35 மணி, ஈரோடு 7.12, சேலம் 7.58, சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 11.50 மணிக்கு வரும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.25-க்கு புறப்படும் ரயிலானது (எண்.20643) சேலம் 5.48, ஈரோடு 6.32, திருப்பூர் 7.13, கோவை 8.15 மணிக்கு வந்தடையும்.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய ஏப்ரல் 7-ஆம் தேதி முன்பதிவு துவங்கிய 30 நிமிடங்களில் முதல் நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தது.
சுழலும் குஷன் இருக்கைகள், தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதிகள், மினி பாண்ட்ரி, இந்தியன் மற்றும் வெஸ்டர்ன் டாய்லட் வசதிகள், பிரெய்லி சிஸ்டம், ரியர் கேமரா வசதிகள், ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு எமெர்ஜென்சி விளக்குகள், ஹீட் வெண்டிலேட்டர், ஏசி, தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான அமைப்புகள் இந்த ரயிலில் உள்ளன.
நேற்று இந்த ரயிலில் பயணித்த பலரும் ரயில் பயணம் மிகவும் ஆடம்பரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் வந்தே பாரத் ரயிலில் நேற்று பயணித்தனர்.
சுழலும் குஷன் இருக்கையில் வானதி சீனிவாசன் அமர்ந்து இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் சென்னை – மதுரை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
செல்வம்
உறுப்பினர் சேர்க்கை: பரிசுக்கு நான் கேரண்டி!
திருச்சி மாநாடு: சசிகலாவுக்கு அழைப்பா? – ஓபிஎஸ் பதில்!