Chennai-IIT-ranking-in-india-CMCvellore-chennai-presidency-college

சென்னை ஐஐடி தான் டாப்… மத்திய அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல்!

தமிழகம்

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் ஜகதேஷ் குமார், உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கற்பிக்கும் முறை, கற்றுக்கொள்ளும் முறை, ஆய்வு மற்றும் தொழில்முறை பயிற்சி உள்ளிட்டவற்றைக்  கருத்தில் கொண்டு  தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு(National institutional ranking framework) இந்த தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

பல்கலைக் கழகங்கள், பொறியியல், கட்டிடக்கலை, மேலாண்மை, பார்மஸி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், ஆய்வு உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களுக்கான பிரிவில் இந்திய அறிவியல் கழகம் (IISc) முதலிடமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் 2-ம் இடமும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா இந்த ஆண்டு 3-வது இடம் பிடித்துள்ளது.

பொறியியல் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடமும், டெல்லி மற்றும் மும்பை ஐஐடி-க்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடமும் பிடித்துள்ளன.

மருத்துவத்துக்கான பிரிவில் டெல்லி எய்ம்ஸ் கல்லூரி முதலிடத்தையும் சண்டிகரில் உள்ள Post Graduate Institute of Medical Education and Research 2-வது இடத்தையும் பிடித்துள்ளன. வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதே போல, கல்லூரிகளுக்கானப் பிரிவில் சென்னை பிரசிடென்ஸி கல்லூரி 3-வது இடத்தையும், பல்மருத்துவப் படிப்பில் சென்னையில் இயங்கி வரும் சவீதா மருத்துவக் கல்லூரி முதலிடத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பிரிவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளுக்கும் தரவரிசை பட்டியல் வெளியிட தயாராகுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் தரத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

~அப்துல் ராபிக் பகுருதீன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *