இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடியதால், சென்னை மாநகரமே அக்டோபர் 6 ஆம் தேதி ஸ்தம்பித்துவிட்டது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மிகப்பிரம்மாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் மெரினாவுக்கு படையெடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் நேரில் இந்த நிகழ்சியை கண்டு களித்தனர்.
எம்.ஐ 17, ஹார்வர்ட், டகோட்டா, ரஃபேல், தேஜஸ், சுகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையில் உள்ள விமானங்கள் பல்வேறு சாகசங்களை வானில் நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
மெரினாவுக்கு படையெடுத்த மக்கள்!
இன்று விடுமுறை நாள் என்பதால் குழந்தைகளுடன் விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக காலையிலேயே மின்சார ரயில், மெட்ரோ, பஸ், பைக் என வாகனங்களில் மெரினா நோக்கி பொதுமக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டே பேட்டன் அடிப்படையில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரயில்களும், 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும். விமான சாகச நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால், ரயில் சேவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்த பலரும் பெரும்பாலும் மின்சார ரயில்களிலேயே பயணித்தனர். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரயில் இயக்கப்பட்டதால், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் காலையே அலைமோதியது.
குறிப்பாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக பொதுமக்கள் காத்திருந்த ஒரு வீடியோவை பார்க்கும்போது, இது நம்ம சென்னையா? இல்லை மும்பையா? என்று சற்று கன்ஃபியூஸ் ஆகும்படி ரயிலின் இரு புறமும் மாபெரும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.
மெட்ரோ கூட்ட நெரிசலில் மக்கள்!
தாம்பரம் வட்டாரங்களில் இருந்து மெரினா வந்த பலரும் கிண்டி ரயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரயில்களில் சென்றுவிடலாம் என்று கிண்டி மெட்ரோவுக்கு சென்றனர். அங்கு தான் அவர்களுக்கு ட்விஸ்ட் காத்திருந்தது.
“பிளாட்ஃபார்ம் ஃபுல்லா கிரெளட் அதிமாக இருக்கு. ஒரு ட்ரெயின் போன பிறகு தான் உங்கள அலோ பண்ண முடியும்” என்று பாதுகாவலர்கள் பயணிகளை அனுமதிக்கவே இல்லை.
மெட்ரோ செக்கிங் கேட்டுக்குள் பொதுமக்களை நுழைய விடாமல் அடுத்த டிரெய்ன் வரும்வரை காத்திருக்க வைத்தனர். ஒருவழியாக 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் பொதுமக்களை அனுப்பினர். ஆனால், ஏற்கனவே வந்த மெட்ரோவில் அதிகளவில் கூட்டம் இருந்ததால் அதில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு வழியாக ஓமந்தூரார் மெட்ரோ ஸ்டேஷனை வந்தடைந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி சின்னா பின்னமானார்கள். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, அவர்களுக்கான தனிவழியோ என எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.
ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறிய மெட்ரோ ஊழியர்கள், பொதுமக்களை கூஆர் கோர்டு மற்றும் மெட்ரோ அட்டையை மட்டும் காண்பித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
“சேப்பாக்கம் ஸ்டேடியம்ல ஐபிஎல் மேட்ச் நடந்தா கூட பேரிகார்டுகள் அமைச்சு… சரியா வழிநடத்துவாங்க. இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு எதுவுமே பண்ணலையே” என்று பொதுமக்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தனர்.
இன்னொரு பக்கம் பறக்கும் ரயில், பேருந்துகள், சொந்த வாகனங்கள் என்று பல்வேறு திசைகளில் இருந்து மெரினாவுக்குத் திரண்டனர் மக்கள். வாகன பாஸ் வைத்திருந்தவர்கள் விக்டோரியா ஹாஸ்டல் அருகே பார்க் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பலர் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்தே நடந்து சென்று கண்ணகி சிலை வழியாக மெரினாவுக்குள் நுழைந்தனர்.
பணம் இருக்கு… தண்ணி சாப்பாடு இல்லை!
எங்கு பார்த்தாலும் மனித தலைகள். ஜல்லிக்கட்டுக்கு பிறகு இப்படி ஒரு கூட்டம் மெரினாவில் கூடுவது இப்போது தான் என்ற குரல்களும் கூட்டத்தில் எதிரொலித்தது.
ஒருபக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும், மகிழ்ச்சியோடு விமான சாகசத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர். “இவ்வளவு ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க. ஒரு தண்ணீர் பந்தல் அமைச்சிருக்கலாமே, சின்ன பசங்க தண்ணி தாகம் தாங்காம என்ன பண்ணுவாங்க” என்று பலரும் ஆவேசமாக பேசியதை காண முடிந்தது.
அதேநேரம் மெரினாவில் உள்ள கடை வியாபாரிகள் தங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்தனர். அவர்களிடமும் ஒரு கட்டத்தில் ஸ்டாக் தீர்ந்துவிட்டதால் பலருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், வெயிலின் தாக்கம் தாங்காமல் டிஹைட்ரேஷன் ஆகி சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஒரு மணிக்கு விமான நிகழ்ச்சி முடிந்ததும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே கணிசமான மக்கள் புறப்பட்டனர். கண்ணகி சிலைக்கு எதிரே செல்லும் திருவல்லிக்கேணி பாரதி சாலை, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன், ஓமந்தூரார் மெட்ரோ ஸ்டேஷன், அண்ணா சாலை என ஒவ்வொரு பக்கமாக பிரிந்தனர்.
மக்கள் கூட்டத்தால் காமராஜர் சாலை, வாலாஜா சாலை நிரம்பி வழிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் திருவல்லிக்கேணியில் மக்கள் கூட்டம் தான். திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணா சாலை வரை உள்ள பகுதிகளில் எல்லா ஹோட்டல்களும் நிரம்பி வழிந்தன. பை நிறைய பணம் இருந்தும் கூட மாலை 4 மணி வரை பலர் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அரைமணி நேரமாக ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தது. அங்கிருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ட்ரெச்சரில் சுமந்து சென்று கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொதுமக்கள் பலரும் நடந்தே வீடுகளுக்கு சென்றுவிடலாம் என்ற முடிவுடன் குழந்தைகளை சுமந்தபடி நடையை கட்டினர். வெயிலின் தாக்கம் தாங்காமல் மரத்தடி நிழலிலும், கடைகளுக்கு முன்பும் இளைப்பாறினர். திருவல்லிகேணியை பார்க்கும் போது கோவில் விழாவுக்கு மக்கள் நடைபயணமாக சென்று வந்ததுபோல தான் காட்சியளித்தது. பல கடைகளிலும் தண்ணீர், உணவு தீர்ந்துவிட்டதால் திண்டாடினர்.
“ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் லீவு. இனிமே அங்க கூட்டிட்டு போ… இங்க கூட்டிட்டு போணு ஏங்கிட்ட சொன்ன.. நடக்குறதே வேற” என கணவன் மனைவி இடையே இந்த களேபரத்திற்குள்ளும் கலவரம் நடந்தது. ஒருவழியாக மாலை 5 மணிக்கு மேல் வாலாஜா சாலையில் மெல்ல மெல்ல மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது.
நிர்வாகம், கிலோ எவ்வளவு?
இந்தநிலையில், பொதுமக்களுக்கு போதுமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்காததால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய – மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.
குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
ஆனால், ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
15 லட்சம் மக்கள் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்ததாக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தாலும், இன்று கூட்ட நெரிசலில் பட்ட வேதனையை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமாட்டார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…