கள்ளக்குறிச்சி பள்ளிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகம்

மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு முன்பு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பள்ளியில் உள்ள பொருட்கள், வாகனங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி, தீவைத்து எரிக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த கலவரம் காரணமாக கள்ளக்குறிச்சி பள்ளி மூடப்பட்டது. எனவே பள்ளியைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளியைத் திறக்கவும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கலவரத்தால் சேதமடைந்த பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பள்ளியைத் திறப்பது தொடர்பான வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று (ஜனவரி 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தரப்பில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளியைத் திறந்தது முதல் இன்று வரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

ஆனால் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று வாதிடப்பட்டது.

இதற்கு நீதிபதி இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? எனப் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.

6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது ஏற்கனவே நடந்த நிகழ்வு அவர்கள் நினைவில் வரும். அதற்காக மனநல ஆலோசனை போன்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தப் பள்ளி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில், பள்ளி திறக்கப்பட்ட பிறகு தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜனவரி 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மோனிஷா

‘டாடா’வை வாங்கும் ரெட் ஜெயன்ட்

சென்னையில் ரோப் கார் சேவை : எங்கிருந்து எங்கு?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *