வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தனி ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்ததோடு, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு அமைப்பினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்த விவகாரத்தில், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில்,
2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை வேங்கைவயல் விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று (மார்ச் 29) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தி 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நீதிபதி சத்திய நாராயணன் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்த இருக்கிறார்.
மோனிஷா
“அநியாயமா பில் கொடுக்குறாங்க” : மா.சு.பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!
பேருந்து, ரயில், மெட்ரோ : ஒரே டிக்கெட் எப்போது?