சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனவே பள்ளியில் சேர்க்க இருக்கும் தனது மகன் யுவர் மனோஜுக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு அவர் கேட்டபடி சான்றிதழ் கொடுக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து தான் கேட்டபடி, தனது மகனுக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்டு 16) உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாசில்தார் சார்பில், சான்றிதழ் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விண்ணப்பதாரருக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழை இன்னும் 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்
கிறிஸ்டோபர் ஜெமா