சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முரளிதரை நியமிக்க டெல்லியில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் நீதிபதி எஸ்.முரளிதர். தற்போது ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் டெல்லியில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முரளிதரை நியமனம் செய்யப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சட்டப்படிப்பு!
சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்த எஸ். முரளிதர் தனது வழக்கறிஞர் பணியை 1984ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார்.
சுமார் மூன்றாண்டுகளுக்கு பிறகு, அதாவது 1987ஆம் ஆண்டு டெல்லி சென்ற அவர் இந்திய உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவை குழுவின் உறுப்பினர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றின் சட்ட ஆலோசகர் என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
டெல்லி கலவர வழக்கு – இடமாற்றம்
2006ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வழங்கிய அதிரடி உத்தரவே அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது சென்னை தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உலக இதய தினமும்… யுவன் சொன்ன அட்வைஸும்!
எடப்பாடி பொதுக்கூட்டம் : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது!