எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 1) பாராட்டு தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் கடந்த 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, ”தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா?” என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஒரு நாள் அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்று வழக்கு பிப்ரவரி 1ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம்னி பேருந்துகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண், ”கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்து நிறுத்ததில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி வேண்டும்.
கிளாம்பாக்கத்திற்கு செல்லும் வழியில் பயணிகளை ஏற்ற அனுமதி வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ”கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து அவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள், அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகள் போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.
மேலும் தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை என்றும், இந்த பிரச்சனையில் சுமூக தீர்வு காண வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து, ”எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பதை தவிர்க்க முடியாது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது” என்று அரசுக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsENG : இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகும் பாகிஸ்தான் வம்சாவளி!