ராம நவமி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு நியாயமானது: உயர் நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கலாம் என்று நிபந்தனை விதித்துள்ளது.
ராம நவமியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 12) முதல் 17-ம் தேதி வரை, மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்ததை சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த யாத்திரைக்கு நாங்கள் எதிராக இல்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், கடந்த முறை ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை 11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி கோரப்பட்டதாகவும் அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, 11 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுத்தது நியாயமானது என தெரிவித்த நீதிபதி, ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை நடத்திக் கொள்ளலாம் என கூறினார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நீதிபதி, கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரி விண்ணப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தை பரீசிலித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா
GTvsRR : 19வது ஓவரில் ட்விஸ்ட்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்!
பத்தவச்சிட்டாரு டீக்கடக்காரரு : அப்டேட் குமாரு