சென்னையில் இன்று (மே 30) பலத்த காற்று மற்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சென்னையில் இன்று பலத்த காற்று வீசும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தெற்கு ஆந்திராவில் வீசும் புயல்கள் தமிழக எல்லைகளை கடக்கின்றன, இது மிகவும் வலுவிழந்துள்ளது, வலுவிழந்த புயல்கள் சென்னை நகரத்தை கடக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஓசூரில் மிக பலத்த இடியுடன் மழை பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
திமுகவுடன் கூட்டணி திருப்பூர் துரைசாமிக்கு பிடிக்கவில்லை: வைகோ
தோனிக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைக்குமா? – சாக்ஷி வேதனை!