சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் ஊராட்சி பகுதிகளில் ஒரு வாரமாக மழை நீர் வடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி துவங்கியது. கடந்த வாரம் சென்னையில் பெய்த கன மழையால் நகரின் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மழை நீரை அகற்றினர்.
இந்தநிலையில், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கொளுத்துவாஞ்சேரி, தனலட்சுமி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் கடந்த ஒரு வாரமாக சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, இந்த பகுதிகளில் தந்தி கால்வாய் மூலமாக மழைநீரை வெளியேற்ற வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், மழை நீர் செல்ல வழி இல்லாததால் இந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மழை நீரை அகற்ற அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மழை நீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதிகளில் இடுப்பளவிற்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து வசதி தடைப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தந்தி கால்வாய் பணிகள் முடிவுற்றால், மழை நீர் தேங்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
புத்த மதத்திற்கு மாறிய நடிகர்!
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு!