வடகிழக்கு பருவமழையால், சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மேயர் பிரியாராஜன் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு (அக்டோபர் 31) முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மாநகரில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டிவருகிறது.
அந்த வகையில் நேற்று நள்ளிரவில் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கிய மேயர் பிரியாராஜன் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஜி.பி.சாலை, அண்ணா சாலை, வால்டாக்ஸ் சாலை, பிரகாசம் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டார்.
மழைநீர் தேங்கியுள்ள இடங்கள், அவற்றை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 1) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியாராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மழை பெய்யக்கூடிய இடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் தரைத்தளத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, அந்த அறையை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரிடையாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெ.பிரகாஷ்
தமிழகம் முழுவதும் மழை: வானிலை அப்டேட்!
கனமழை எதிரொலி: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!