அரசு கேபிள் டிவி முடங்கிய விவகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை எந்தவித இடையூறுமின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 22) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் திடீரென முடங்கியது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான செட்டாப் பாக்ஸ்கள் பாதிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த வி.எஸ்.ராஜன் என்பவரின் மும்பையை அடிப்படையாகக் கொண்ட மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் மற்றும் பாலாஜி மிசின் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி 614 கோடி ரூபாய் மதிப்பில் 37 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, நிர்வகிக்கும் சேவைகளை ராஜனின் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனங்கள் கால தாமதம் செய்தன. இதனால் சுமார் 52 கோடி ரூபாய் பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை சந்தித்தன.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் சேவை துண்டிக்கப்பட்டது தொடர்பாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்தார்

இதனை நீதிபதி செந்தில்குமார் ஏற்றுக்கொண்டார். அதன்படி இன்று நடந்த விசாரணையில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்து மிரட்டல் விடுக்கக் கூடாது.” எனவும் வாதிட்டார்.

மேலும் கேபிள் சேவையை துண்டித்து இடையூறு செய்வது சட்ட விரோதம். எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவில், ”கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்கக் கூடாது. பிரச்சினை குறித்து மத்தியஸ்தர் மூலமாக அடுத்த 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

அதேவேளையில் அரசு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும்” என்று தனியார் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

FIFA WorldCup 2022: மெஸ்ஸிக்கு சாதனை… அர்ஜென்டினாவுக்கு வேதனை!

கோவை கார்வெடிப்பு : 6 பேருக்கும் காவல் நீட்டிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.