2002ம் ஆண்டு அறிவிப்பாணையின் படி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8000 காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு புதிய ஓய்வுதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி அதே ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கபட்ட அனைத்து ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், 2003ம் ஆண்டு 8,000 பேர் காவலர்களாக பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கும் புதிய பென்ஷன் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கபட்டது. இதனை எதிர்த்து, சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களது மனுவில், “மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கே, புதிய பென்ஷன் திட்டம், 2004 ஜனவரி முதல் தேதியில் இருந்து தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு, 2003ல் பணியில் சேர்ந்த, எங்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது.
இப்பணியில் சேர ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தோம். ஆனால் பல்வேறு காரணங்களாக, பணியில் சேர காலதாமதம் ஏற்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்தபோது, ‘வருங்கால வைப்பு நிதி திட்டம் கிடையாது’ என அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.
எங்களுக்கு பின், விண்ணப்பித்து, 2003 மார்ச் 3ம் தேதி, பணியில் சேர்ந்த பெண் காவலர்கள், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ளனர்.
எனவே 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடவேண்டும் என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ”2002-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, அந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது” என வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத் தரப்பில், ”2002ம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் துவங்கியிருந்தாலும், 2003 நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் தான் அவர்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவர்களுக்கு தகுதியில்லை” என வாதிடப்பட்டது.

தாமதமானதற்கு அவர்கள் காரணமல்ல
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்கள், ஓராண்டிற்குள்ளாகவே பணி நியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறுகின்றனர்.
அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலர்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11 மாதங்கள் தாமதமானதற்கு அவர்கள் காரணமல்ல. எனவே அவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
மேலும், இவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கும் நடைமுறைகளை அரசு 12 வாரங்களில் முடிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஓட்டு கேட்டு இங்கு வராதீர்கள் : துருக்கி அதிபரை எச்சரிக்கும் பொதுமக்கள்
அன்புள்ள அம்மா..சிறுமியின் கடிதத்தால் நெகிழ்ந்த தாய்!