கோடை விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு போறீங்களா? – அப்போ இத படிங்க!

Published On:

| By christopher

chennai hc order on vehicles control in ootty

தமிழகத்தில் வெயில் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 13) உத்தரவிட்டுள்ளது. chennai hc order on vehicles control in ootty

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி முதலே வெயில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளும் முடியும் நிலையில், கோடை விடுமுறையைக் கழிக்க பலரும் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம்.

இதனையொட்டி விடுமுறைக் காலங்களில் கோடை வாசஸ்தலங்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவர் “கோடை விடுமுறை காலங்களில் உதகை, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் 50 இருக்கைகள் கொண்ட வாகனங்களை இயக்குவதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தடை விதித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ஐஐடி, ஐஐஎம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் வாகனக் கட்டுப்பாடு!

தொடர்ந்து ஆய்வறிக்கை வரும் வரை ஒரு நாளைக்கு எவ்வளவு வாகனங்கள் செல்லலாம் என்பதற்கு நீதிபதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.

அதன்படி, “உதகைக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அதேபோல கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.

அரசு பேருந்து, ரயில்கள் மூலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதே போன்று காய்கறிகளை மலைப்பகுதியில் இருந்து ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்த வேண்டும். இவை அமல்படுத்தப்பட்டது குறித்து வரும் ஏப்ரல் 25ஆம் தேதி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share