Bail to four Pachaiyappa's College Students

கொலை வழக்கு : மாணவர்களுக்கு மறக்க முடியாத தண்டனையை விதித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா


கொலை வழக்கில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை அரசு மருத்துவமனை ஐசியு வார்டுகளில் பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநில கல்லூரி மாணவர்களும் ரூட் தலை உள்ளிட்ட விவகாரத்தில் தொடர்ந்து மோதிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த மோதல் தற்போது கொலையில் சென்று நிறுத்தியுள்ளது.

மாநிலக் கல்லூரி மாணவரான சுந்தரை கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுந்தர் சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பெரியமேடு போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தநிலையில் கைதான 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலை செய்துதான் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். ஆனால், மாணவர்கள் அடிதடி போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வேதனையை தருகிறது” என்று கூறியிருந்தது.

நல்லவேளை, ரயில், பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் செல்வதில்லை. அப்படி சென்றிருந்தால் அங்கும் கலவரம் வெடித்திருக்கும் என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

குறுகிய காலத்துக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் எப்படியாவது நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிடும் என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மாணவர்களின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று (டிசம்பர் 2) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது யுவராஜ், ஈஸ்வரன், ஈஸ்வர், சந்துரு ஆகிய 4 பேருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

அடுத்த உத்தரவு வரும் வரை இரண்டு பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஐசியு வார்டிலும், இரண்டு பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஐசியு வார்டிலும் காலை 10 மணி முதல் 2 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பேருந்து தினம், ரயில் தினம் என்ற பெயரில் மாணவர்கள் இடையூறு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்த அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் மீது மொத்தம் 231 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீது 58 வழக்குகள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பச்சையப்பா மற்றும் மாநில கல்லூரி முதல்வர்கள் ஆஜராவதை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உயர்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் முதன்முறையாக உபேரின் நீர்வழிப் போக்குவரத்து சேவை!

கொட்டும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

இன்ஃபோசிஸுக்கு அதிகபட்ச அபராதம் விதித்த அமெரிக்கா: எத்தனை கோடி தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts