ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் 2 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 10) மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி மணிகண்டன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக மும்பையைச் சேர்ந்த கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு தற்கொலை செய்துகொண்ட மணிகண்டனின் விவரங்களை வழங்கக்கோரி சிபிசிஐடி கடந்த மாதம் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
அதேபோன்று ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செய்துகொண்ட சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரகுவரன் தொடர்பாகவும் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த இரு நோட்டீஸ்களையும் ரத்து செய்யக்கோரி ’கேம்ஸ் 24*7’ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “சிபிசிஐடி நோட்டீஸ் ஆனது விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. எனவே நோட்டீஸ் மீது இடைக்கால தடை விதிக்க முடியாது” என்று நீதிபதி சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாட்டிக்காக கொள்ளையனுடன் சண்டை போட்ட 10 வயது சிறுமி!
சேப்பாக்கம் சிஎஸ்கே வின் கோட்டை… தோனிக்கு சிறப்பான ஆண்டு… ஆஸ்திரேலிய வீரர் ஹெய்டன்