சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) இடைக்கால தடை விதித்துள்ளது.
திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த சிறப்பு உரிமம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமைதாரரால் குறிப்பிடப்பட்ட இடத்தில் பொது நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மதுபானம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பு உரிமம் குறித்த அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் வெளியிடப்பட்டது.
இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பாமக பிரமுகரும், சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞருமான கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் தான் அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன.
திருமணம் போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் என்பதால், இந்த விதிகளை அனுமதித்தால், அது பொதுமக்கள் அமைதியாக வாழும் உரிமையை பாதிக்கச் செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருத்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ’பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியும்.’ என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.
அதற்கு, பொது இடங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்கவும் தடை விதிக்க கோரியுள்ளோம் என்றும், புதிய திருத்தம் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்வதாகவும் பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘அசுத்தமா இருக்கு, ஆக்சிஜன் இல்ல’ : அரசு மருத்துவமனையில் டிஎம்எஸ் ஆய்வு!
முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது ஏன்?