சென்னை – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை வழித்தடத்தில் இன்று (டிசம்பர் 8) முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில் பேசின் பாலம் – வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதுதவிர, ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது.
இதுபோல, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் – பூங்கா ரயில் நிலையம் இடையே, தாம்பரம் – பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், சென்னையில் புறநகர் ரயில்கள் இயங்கவில்லை. புயலின் தாக்கம் குறைந்ததும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனால், சென்னை – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை வழித்தடத்தில் குறைவான ரயில்களே இயக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை வழித்தடத்தில் இன்று (டிசம்பர் 8) முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முள்ளங்கி சூப்