சென்னையில் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் தற்போது மாநகர பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் இன்று மாலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வாரத்தின் முதல் நாள் இன்று. கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள், அலுவலகத்துக்குச் சென்ற பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்று மாலை பேருந்துக்காக காத்திருந்த நிலையில், இந்த வேலை நிறுத்தத்தால் கடும் அவதிக்குள்ளாகினர்.
33 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆளுங்கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுசவும் இதில் பங்கேற்றது.
பேருந்துகள் இயங்காததால் வடபழனி, ஆலந்தூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் என பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருந்ததை காண முடிந்தது.
வாடகை வாகனங்கள், மின்சார ரயில்கள் என மாற்று போக்குவரத்து மூலம் மக்கள் பயணிக்கத் தொடங்கினர். இதனைப் பயன்படுத்தி வாடகை ஆட்டோ மற்றும் கார்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அரசு பேருந்துகள் தற்காலிகமாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவரவர் இடத்துக்குச் செல்ல உதவுமாறும், விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்குமாறும் அனைத்து ஆட்டோ. ஷேர் ஆட்டோ, டாக்ஸி, கால் டாக்ஸி கேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டது.
திடீர் வேலைநிறுத்தம் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “தனியார்மயம் என்ற பேச்சுக்கு இடமில்லை. பொதுமக்களுக்குக் கூடுதல் சேவை அளிக்க வேண்டும் என்று கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்த பிரச்சினையைக் கவனித்து முதல்வர் ஜப்பானிலிருந்து தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படையில் போக்குவரத்து ஊழியர்களை அழைத்துப் பேசினோம். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேர வேலை நிறுத்தத்துக்குப் பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தன.
பிரியா