சென்னை செம்மொழி பூங்காவில் வருகின்ற பிப்ரவரி 10ம் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதுகுறித்த தகவல்களை கீழே பார்க்கலாம்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வருகின்ற சனிக்கிழமை (பிப்ரவரி10) 3-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேற்று(பிப்ரவரி7) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 ஏக்கர் பரப்பளவிலான இடம் மலர் கண்காட்சிக்காக பயன்படுத்தப்படும்,” என தெரிவித்தார்.
தொடர்ந்து செம்மொழி பூங்காவில் நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கான டீசரையும், அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
வேளாண்மை செயலாளர் அபூர்வா, ”இதற்காக நாற்றங்கால்களில் டிசம்பர் முதலே செடிகள் வளர்க்கப்பட்டு பிப்ரவரி 1-ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. பொதுமக்கள் கண்காட்சி முடிந்த பின்னர் முன்பதிவு செய்து தங்களுக்கு தேவையான செடிகளை வாங்கிக்கொள்ளலாம்,” என்றார்.
இந்த கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. டியூலிப்ஸ், ரோஜா, சம்பங்கி, டிசம்பர் பூ, சூரியகாந்தி, சங்கு புஷ்பம், நித்யகல்யாணி என சுமார் 12 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
காலை 1௦ மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 150, 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூபாய் 75 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மலர் கண்காட்சிக்கான டிக்கெட்டினை ஆன்லைன் வாயிலாகவும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி இந்த செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் ரெய்டு: பின்னணி என்ன?
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நோக்கமே அடிப்பட்டு விடும் : அன்சூல் மிஸ்ரா