படகு வருமா? கோபத்தின் கொந்தளிப்பில் வெள்ளச்சேரி!

தமிழகம்

புயல் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து சென்னை வேளச்சேரி டிசம்பர் 6 ஆம் தேதி வரைக்கும் விடுபடவில்லை.

ராம் நகர், விஜய நகர், எம்.ஜி.ஆர் நகர், என வேளச்சேரியின் எல்லா திசைகளிலும் தண்ணீர்தான். குறைந்தபட்சம் முழங்காலுக்கு மேல் அதிகபட்சம் இடுப்பு வரை என்ற நீர் மட்டம்தான்.

இந்த நிலையில் மின்னம்பலம் டீம் இன்று காலை 6 மணிக்கு வேளச்சேரி விஜயநகர் சென்னை சில்க்ஸ் எதிரில் சென்று நின்றோம். அந்த அதிகாலை வேளையில் பால் கிடைக்குமா என்று இடுப்பளவு தண்ணீரில் பலர் மெல்ல மெல்ல நடந்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்கள். சிலர் படகுகளிலும் சிலர் நடந்தும் வந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது நாம் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. ராம் நகருக்குள் இருந்து ஒரு ஜேசிபி வாகனம் வெளியே வந்துகொண்டிருந்தது. அந்த ஜேசிபியில் பெண்கள், வயதானவர்கள் என பலர் மூட்டை முடிச்சுகளோடு கெட்டியாக பிடித்துக் கொண்டபடியே வந்துகொண்டிருந்தனர்.
இரண்டு இரவுகளை வெள்ளத்தில் கழித்தவர்களுக்கு மூன்றாவது நாள் விடிந்தும் கூட இன்னும் தேவையாக இருப்பது ஒரு பால் பாக்கெட் எனும்போது கவலையாகவே இருந்தது.

அப்போது ராம் நகருக்குள் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றில் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டோம். படகு ஓட்டிவந்தவர்களிடம் பேசினோம்.
“நாங்க கோவளம் மீனவர் பஞ்சாயத்தை சேர்ந்தவங்க. நாங்க 2015 லயும் இங்க வந்து நிறைய பேரை மீட்டிருக்கோம். இப்ப கவர்ன்மெண்ட்ல கூப்பிட்டாங்க. ஆனா எங்க வரணும், எப்ப வரணும் எதுவும் சொல்லலை. நாங்களே லாரியில போட் எடுத்துக்கிட்டு வந்து இங்க இறங்கிட்டோம்,

ஒவ்வொரு தெருவா போயி அங்க இருக்குறவங்களை ஏத்திக்கிட்டு வர்றோம். கவர்ன்மெண்ட் இதுவரைக்கும் எங்களுக்கு சாப்பாடு தண்ணி கூட கொடுக்கலை. நைட் கூட போட்லயே தான் தூங்கினோம். அரசாங்கம் கண்டுக்குதோ கண்டுக்கலையோ நாங்களே செலவு பண்ணிதான் மக்களை காப்பாத்திக்கிட்டிருக்கோம். இதுவரைக்கும் 500 பேரை காப்பாத்திருக்கோம். அதுல 100 குழந்தைங்க. மக்களுக்காக இதை தொடர்ந்து பண்ணுவோம்” என்றார் கிஷோர் என்ற மீனவர்.

படகில் சென்று ஒவ்வொருவராய் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் மீனவர்கள். படகில் ஏறிய கணேஷிடம் பேசினோம். “ எங்க தெருவுல ஆறு அடிக்கு தண்ணி நிக்குது. கார், பைக் எல்லாமே மூழ்கிப் போச்சு. மிடில் கிளாசால இதுக்கு மேல பொறுத்துக்க முடியலை. இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல. போரூர்ல என் பையன் வீட்டுக்கு போயிட்டிருக்கேன்.

இயற்கை சீற்றம் இருக்கத்தான் செய்யும், இயற்கைய குறைசொல்லி பிரயோஜனம் இல்லை., அரசாங்கத்தையும் நான் குறை சொல்லல. ஆனா ஒரு ஏரியாவே குளமாகிற அளவுக்கு அரசாங்கம் இனியும் விடக் கூடாது. வேளச்சேரி ப்ளானிங்ல அரசு ஒரு கொள்கை முடிவெடுக்கணும். சிஸ்டத்தை மாத்தாதவரைக்கும் இப்படித்தான் நாங்க அழிஞ்சுக்கிட்டிருப்போம்” என்றார் சலிப்பாக.

கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு எதிர்ப்பட்ட பிரசாத்திடம் பேசினோம். ‘நாங்க ராம் நகர் செவன்த் மெயின்ரோடுங்க. இந்த மூணு நாளா எங்க கவுன்சிலரை வலை வீசி தேடிக்கிட்டிருக்கோம். அவர் இதுவரைக்கும் வரலை. இன்னிக்குதான் ஒரு போட் வந்திருக்கு.
2015 க்குப் பிறகு எட்டு வருசமா என்ன டெவலப்ன்மென்ட் பண்ணாங்கன்னு தெரியலை. 2015 ஐ விட இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நெறைய பேர் உள்ள இருக்காங்க, அவங்க வெளியே வரணும்னு ஆசைப்படுறாங்க. போட் இன்னும் போதுமான அளவுக்கு வரலைங்க” என்றார் ஆதங்கமாய்.

தண்ணீரில் நின்றிருந்த ராஜ்குமாரிடம் பேசியபோது, “போட்டுல வந்து ஒரு பால் பாக்கெட், மெழுகுவர்த்தியோ எதுவுமே தரலை. இருக்கமா செத்தமானு கூட பார்க்க வரலை. ஒருவேளை நாங்க பாடி ஆன பிறகுதான் படகு வருமா சார்?” என்று கோபமாக கேட்டார். அந்த கோபத்தில் விரக்தியும் வேதனையும் வெள்ளத்தை விட அதிகமாக இருந்தது.

படகில் ஏறிக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ‘மெயின் ரோட்ல வந்து பாத்துட்டு போயிட்டா போதுமா சார்…. உள்ள எத்தனை தெரு இருக்கு தெரியுமா ஒவ்வொரு தெருவுலயும் எத்தனை பேர் வீட்டுக்குள்ள தவிக்குறாங்க தெரியுமா, அரசாங்கம் தெருவுக்கு ரெண்டு போட் அனுப்பணும். ராம் நகர் ஆறாவது ஏழாவது எட்டாவது தெருவுல எல்லாம் மக்கள் நிறைய இருக்காங்க. ஒருத்தரும் ஒரு உதவியும் கெடைக்காம இருட்லயும் பசியிலயும் தவிக்குறாங்க. குழந்தைங்க, வயசானவங்கனு ராம் நகர்ல பல பேர் தவிக்குறாங்க. தயவு செய்து அரசாங்கத்தை உள்ள வர சொல்லுங்க சார்.

ஒவ்வொ தெருவுக்கும் படகு அனுப்பினால் ஒழிய இங்க இருக்கும் மக்களை காப்பாத்த முடியாது. போன்ல சார்ஜும் இல்லை, நெட்வொர்க்கும் இல்லை. அதனால ஹெல்ப் லைன் நம்பர்ஸ் பயனே இல்லை. வேளச்சேரி முழுக்க படகுகளை அதிகப்படுத்தி மக்களை வெளிய கூட்டிட்டு போக ஏற்பாடு செய்யுங்க சார்” என்று தழுதழுக்கிறார்கள்.

அமைச்சர்கள் கார்களில் மெயின் சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள், ஆனால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை அந்தத் தீவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லமாட்டார்களா என்று ஏங்கிக்  கொண்டிருக்கிறார்கள்.

வேளச்சேரியை நோக்கி நூற்றுக்கணக்கான படகுகளை அரசு இயக்க வேண்டியது அவசரம், அவசியம்!’

களத்தில்- கிட்டு, கேமரா- கௌசிக்
தொகுப்பு: வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *