சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிகள் 77 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளில் மொத்தம் 11.757 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
ஐந்து ஏரிகளிலும் தற்போது மொத்த நீர் இருப்பு 9.076 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 77 சதவிகிதம் ஆகும். கடந்த மாதம் செப்டம்பர் முதல் வாரம் நிலவரப்படி குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளிலும் சேர்த்து 7 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால், தற்போது ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 9 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு 2 டிஎம்சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை நெருங்கியதால் ஏரியிலிருந்து விநாடிக்கு 2500 கன அடி வரை உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 2,500 கனஅடி வரை உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 1,020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருப்பு மொத்த கொள்ளளவு ஆன 3.231 டிஎம்சியில் 2.761 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதே போல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்வதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தண்ணீர் இருப்பு 22 அடியை நெருங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 21.79 அடி தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு விநாடிக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியில் 418 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 374 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடியில் 474 மில்லியன் தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு விநாடிக்கு 395 கனஅடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டின் சென்னையின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியில் பங்கு பெறுவது எப்படி?