சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் 383 ஆவது சென்னை தினம் இன்று (ஆகஸ்டு 21) சிறப்பு நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவினை அமைச்சர் சேகர் பாபு நேற்று (ஆகஸ்ட் 20) தொடங்கி வைத்தார்.
மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெறுகின்றது.

”நம்ம சென்னை நம்ம பெருமை” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கிற்கும், உற்சாகத்திற்கும் குறைவில்லாமல் மக்களை கவர்ந்து வருகிறது.
வார இறுதி நாள் என்பதால் மக்கள் கூட்டமாக வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை வேளாண் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உணவு கடைகள், கிராமிய விளையாட்டுகள் என பார்வையாளர்களுக்காக 55 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடம் முழுவதும் வண்ண விளக்குகள், கொடிகள் என வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
சாலையில் பல வண்ணங்கள் நிறைந்த குடைகளை தலைகீழாக தொங்கவிட்டு செய்திருக்கும் அலங்காரம் வித்தியாசமாகவும், அழகாகவும் அமைந்திருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில், மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் களைகட்டின.
தப்பாட்டத்தின் பறை இசைக்கு கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் நடனமாடி மகிழ்ந்தனர்.

90-ஸ் கிட்ஸ்களின் பிரபலமான விளையாட்டுகளாக இருக்கும் பம்பரம், கோலி, பரமபதம், பல்லாங்குழி, ராட்டினம் போன்றவை 2-கே கிட்ஸ்களை அதிகளவு கவர்ந்துள்ளது.
கொரோனாவால் இரண்டு வருடங்கள் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்த குழந்தைகளுக்கு சென்னை தின விழாவில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

செல்ஃபி பாய்ண்ட், ஒவியப்போட்டி, சோஷியல் மீடியா ரீல்ஸ் போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டி என போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
விழா முடிந்த பிறகு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை என்றும் குடும்பத்தோடு வந்து பல மணி செலவிடுவது நன்றாக இருப்பதாகவும் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இது போலவே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பெசன்ட் நகர் மட்டுமல்லாது, சென்னை தீவுத்திடலில் சென்னை தினத்தை முன்னிட்டு பழங்கால மிதிவண்டி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில், இரண்டாம் உலக போர் காலத்தில் இருந்த மிதிவண்டிகளோடு 70-க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் இடம்பெற்றிருந்தன.
”வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” என்ற வாக்கியத்திற்கு சென்னையின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது.
எனவே மக்கள் அனைவரும் சென்னை தினத்தை சிறப்பாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மோனிஷா