அம்மா உணவகங்களில் இலவச உணவு: ரிப்பன் மாளிகையில் உதயநிதி ஆய்வு!

தமிழகம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது. தற்போது மழை நின்று புயல் காற்று வீசுகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்தநிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மதியம் 3 மணி நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புயல் கரையை கடக்கும் போதும், அதற்கு பின்னரும் தொடர்ந்து கண்காணித்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழைநீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. தற்போது 1700 மோட்டர் பம்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. மழையின் காரணமாக 27 மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. ஹைடிராலிக் ஏணி, மரம் அறுக்கும் இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு தேங்கியுள்ள நீர் மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பாக 329 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. 193 பேர் இதுவரை 8 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2,32,200 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 386 அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

22,000 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களும் மழை பாதிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது” என்றார்.

இதனிடையே சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் களத்தில் இருந்து மழை நிலவரத்தை தெரிவித்து வரும் தன்னார்வலர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஃபெஞ்சல் புயல் நாளை தான் கரையை கடக்கும்” – பிரதீப் ஜான்

சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *