பெருநகர சென்னை மாநகர பட்ஜெட் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மேயர் பிரியா சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறை வகுப்புகளைச் சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் உட்கட்டமைப்பு படிப்படியாக மேம்படுத்தப்படும்.
தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களுக்குத் தெரியப்படுத்த அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் ‘பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்’ அமைத்துத் தரப்படும்.
இளம் பருவத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும்.
எனவே, தேவைப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.
அனைத்து பெருநகர பள்ளிகளின் மேற்தளங்களை மறுசீரமைக்க 2023-24 ஆம் கல்வியாண்டிற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 90 தொடக்கப்பள்ளிகள், 39 நடுநிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இப்பள்ளிகளில் தூய்மை பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதற்கெல்லாம் மொத்தமாக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பன்னாட்டு கலாச்சாரங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள், அதற்கான தீர்வுகளைத் தெரிந்து கொள்வதற்குப் பள்ளிகளில் ஐக்கிய நாடு குழு அமைக்கப்படும்.
மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்புகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் வரை 1 கோடி ரூபாய் செலவில் சிறுதீனி வழங்கப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்போடு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இணையத்தள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த திட்டம் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஜேஇஇ, கிளாட் மற்றும் நீட் போன்ற தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் முதலாமாண்டு கல்விக் கட்டணத்தைச் சென்னை மாநகராட்சி முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும்.
மோனிஷா
ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
ராகுல் தகுதி நீக்கம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!