சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 42 திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில்,
சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை அறிவித்து இதனை செயல்படுத்திடும் வகையில் கடந்த 2021-2022ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்கள்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அவரது அறிவுரையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயான பூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள்,
2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என,
42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள் .

சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும்,
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஈரோடு வந்த மத்திய பாதுகாப்புப் படை!
நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி: கடும் போக்குவரத்து நெரிசல்!
உண்மைகளை மூடிமறைக்க மோடியும் சங் பரிவாரமும் செய்யும் சூழ்ச்சிகள்!