மகளிர் விடுதிகளை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம். அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட இணையதளத்தில் வருகிற 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்கு பதிவு செய்து அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்” என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்