48வது சென்னை புத்தகத் திருவிழா நிறைவு : புதிய உச்சம் தொட்ட விற்பனை!

Published On:

| By christopher

சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் (ஜனவரி 12) நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளதாக பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடந்த நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இப்புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கான சிறுகதைகள், அறிவியல் நூல்கள் முதல் நாவல்கள், மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள், கவிதைத் தொகுப்புகள், வரலாற்று புதினங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

புத்தாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களை தொடர்ந்து கடைசி நாளான நேற்றும் பெருமளவிலான வாசகர்கள் கூட்டம் அலைமோத சென்னை புத்தக திருவிழா நிறைவு பெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிப்பு துறையில் 25 மற்றும் 50 ஆண்டுகள் சேவை புரிந்த 14 பேர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “48வது சென்னை புத்தகக் காட்சியில் 27ஆம் தேதி மொத்தம் 17 நாட்கள் நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். சுமார் ரூ.20 கோடி மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை புத்தகக் காட்சியில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு அதை விட கூடுதலாக ரூ.20 கோடி வரை புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது பதிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா வரை!

பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத்தனித்துவமும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel