திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவை இன்று (டிசம்பர் 12) பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில்கள். குறைந்த கட்டணம் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் இல்லாத விரைவான பயணம் என்பதாலும் பல்வேறு மக்களின் தேர்வாக மின்சார ரயில்கள் இருக்கின்றன.
எனவே இந்த ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில், திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலை சரி செய்யும் பண்யில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு செல்லக் கூடிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் தற்போது சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நேற்று மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா