சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!

தமிழகம்

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளை போன நகைகளை 36 மணி நேரத்தில் மீட்டு ஸ்ட்ராங் ரூமில் இருந்த ஊழியர்களையும் காப்பாற்றியுள்ளனர் சென்னை மாநகர காவல் துறையினர்.

ஆகஸ்டு 13 ஆம் தேதி பிற்பகல் நடந்த இந்த கொள்ளை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அந்த வங்கியிலேயே பணியாற்றிய ஊழியர் முதல் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரை இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கொள்ளை நடந்தது முதல் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் முழுமையாக மீட்கப்பட்டது வரை தனிப்படை போலீஸ் டீம் வட்டாரங்களில் முழுமையாக விசாரித்தோம்.

இதோ த்ரில்லிங் ரிப்போர்ட்! 

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் லிமிட்டில்  அரும்பாக்கம் பகுதியில்  உள்ள ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன்ஸ் (ஃபெடரல் வங்கியில்) ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடித்துவிட்டு, வங்கி ஊழியர்களை ஸ்ட்ராங் அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பித்துள்ளனர். ஸ்ட்ராங் அறை என்றால் அடகு பிடிக்கப்படும் நகைகளை பாதுகாப்பாக வைக்கும் அறை. 

தம் கால்

பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தார். அவருடன் ஏசி, இன்ஸ்பெக்டர்கள், கைரேகை நிபுணர்கள் வந்தனர். நவீன தொழில் நுட்பமான தம் கால் முறையை பயன்படுத்தினார் விஜயகுமார்.

தம் கால் என்றால், குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருக்கும் செல்போன்களில் இருந்து யாருக்கு அழைப்புகள் சென்றிருக்கின்றன, யாரிடம் இருந்து அழைப்புகள் வந்திருக்கின்றன, மெசேஜ் சென்றிருக்கிறது, வந்திருக்கிறது என்பதை அறியும் வசதிதான் தம் கால்.

அந்த வகையில் அரும்பாக்கத்தில் அந்த வங்கி இருக்கும் பகுதியில் உள்ள செல்போன்களின் கால் டீடெய்ல்ஸ், மெசேஜ் டீடெய்ல்ஸ் சேகரித்தனர். 

ஸ்ட்ராங் அறைக்குள் வங்கி ஊழியர்கள்

இதே நேரம் , வங்கியின்  ஸ்ட்ராங் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்கள் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமியை மீட்டு அவர்களிடமும் செக்யூரிட்டியிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடி மயக்கம் வரவில்லை

“மாலை சுமார் 3.00 மணியளவில் எங்கள் வங்கி ஊழியர் கோகோ கோலா கூல்ட்ரிங்ஸ் கொடுத்தார். அதை கொடுத்துவிட்டு  சிறிது நேரம் எங்களையே ஆச்சரியமாக பார்த்தார்கள். காரணம் அந்த கூல்ட்ரிங்ஸில் போதை பொருள் போல ஏதோ கலந்திருப்பார்கள் போல,  அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு எங்களுக்கு மயக்கம் வரவில்லை.

அந்த கோபத்தில் எங்கள் மூவரையும் பாத் ரூமில் உள்ளே வைத்து பூட்டினார்கள். நகைகள் பாதுகாப்பாக வைக்கப்படும் ஸ்ட்ராங் அறையில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, பாத் ரூமில் இருந்த எங்களை இழுத்து போய் ஸ்ட்ராங் அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பித்து விட்டனர்”  என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

விசாரணை வளையத்தில் முருகன்

முருகன்

அடுத்ததாக வங்கியில் இருந்த சிசிடிவி கேமரா, வெளியில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் சாலைகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் போலீஸார். இந்த பதிவுகளின் மூலம் கொள்ளையர்கள்  ஐ டென் கார், மாருதி ஸ்விஃப்ட் கார், ஒரு பைக்  ஆகிய வாகனங்களைப்  பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்தனர். இதன் அடிப்படையில்  சந்தேகப்பட்ட வங்கி ஊழியர் முருகனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

கடன் தொல்லை தீர…

துணை ஆணையர் விஜயகுமார் தனது பாணியில் விசாரித்தார்.  கொஞ்சம் கொஞ்சமாக கக்க ஆரம்பித்தான் முருகன்.  ‘ஐயா நாங்கள் தான் கொள்ளையடித்தோம்.  பள்ளி பருவ நண்பன் சூர்யாவிடம் அடிக்கடி போன்ல பேசுவேன்.  எங்க கஷ்டத்தை ஷேர் பண்ணிக்குவோம். காலமெல்லாம் கஷ்டப்பட்டும் கடன் தொல்லை தீரலை, போதுமான சம்பளமும் இல்லைனு புலம்பிக்கிட்டிருந்தோம்.

பாலாஜி

அப்போதான் நான் வேலை செய்யும் பேங்க்லயே கொள்ளையடிக்கலாம்னு ப்ளான் போட்டோம். சூர்யா அவனோட ஃபிரண்ட் பாலாஜியையும் கூட்டிக்கிட்டு வந்தான். நாங்க போட்ட பிளான்படி  கஸ்டர்மஸ் அதிகமா இல்லாத நேரமான மதியத்துக்கு மேல  சூரியாவும் பாலாஜியும் கொள்ளையடிச்சாங்க.

தங்கத்தை ரிஸ்க் இல்லாம வித்துக் கொடுக்குறதுக்காக சூரியாவோட இன்னொரு ஃபிரண்ட் சந்தோஷ்குமாரை சேர்த்துக்கிட்டோம்” என்று கொட்டிவிட்டான் முருகன்.

குரோம்பேட்டையில் வைத்து பங்கு போட்டோம்!

கொள்ளையர்களை ட்ராக் செய்த துணை ஆணையரின் ஸ்பெஷல் டீம், 14 ஆம் தேதி மாலை செயின்ட் தாமஸ் மௌன்ட் பகுதியில் உள்ள சர்ச் அருகில் காரை நிறுத்தினார்கள்.

லொக்கேஷன் ஒகே என  துணை ஆணையர் விஜயகுமார் அங்கே சென்று  சந்தோஷ் என்று குரல் கொடுக்க, உடனே ஒருத்தன் திரும்பிப் பார்த்திருக்கிறான். அவன்தான், சந்தோஷ் குமார் என உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு ஸ்பெஷல் டீம் உடனே அவனை கொத்தாகத் தூக்கியது.

தங்கத்தை உருக்க பயன்படுத்திய பொருட்கள்

கொள்ளையடித்த நாள் அன்று குரோம்பேட்டை தனியார் விடுதியில் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து அந்த விடுதியை சோதனையிட்டனர். அங்கிருந்த சிசி கேமரா பதிவுகளைக் கைப்பற்றினார்கள்.

சூரியா, பாலாஜி, கோவையில் நகைத் தொழில் செய்துவரும் ஸ்ரீவஸ்தவா  மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரையும் தனித்தனியாக வைத்து விசாரித்தனர் தனிப்படையினர்.

சூரியா தன் வாக்குமூலத்தில்,  “குரோம் பேட்டை தனியார் விடுதியில் கொள்ளையடித்த நகைகளை குறிப்பிட்ட அளவுக்கு பங்கு பிரித்துக் கொண்டோம்.

இதுதான் தங்கம் உருக்கும் மெஷின்

100 கிராம் தங்கம் உருக 5 மணி நேரம்!

மீதியுள்ள நகைகளை உருக்கி விற்பனை செய்ய திட்டமிட்டோம். அதற்காக கோவை ஸ்ரீவஸ்தவா மூலமாக நகை உருக்கும் மிஷன் வாங்கி வந்து விடுதியில் 100 கிராம் உருக்கி பரிசோதனை செய்தோம். நூறு கிராம் உருக ஐந்து மணி நேரம் ஆனது.

இவ்வளவு தங்கத்தையும் உருக்க லேட் ஆகும் என்பதால் அந்த திட்டத்தை கை விட்டோம். அதையடுத்து  எனது மனைவியின் சினேகிதியான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்மலாவிடம் 9.8 கிலோ கொடுத்து வைத்தேன்”  என்று வாக்குமூலம் கொடுத்தான். இதன் அடிப்படையில்   உடனே ஸ்பெஷல் டீம் அனுப்பி நிர்மலாவிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

அரும்பாக்கம் டு அச்சரப்பாக்கம்

சந்தோஷ் குமார் கொடுத்த வாக்குமூலத்தில்,  “சூரியா, வங்கி ஊழியர் முருகன் எல்லாம் நண்பர்கள்தான்.  நாங்கள் செய்த முதல் தவறு இதுதான். என்னிடம் கொடுத்த 7 கிலோ நகைகளை என் மனைவி ஜெயந்தியின் உறவினர் இந்திரா என்பவர் அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டரின் மனைவி  அவரிடம்தான் பாதுகாப்பாக கொடுத்து வைத்துள்ளார்”  என்றார்.

இதைக் கேட்டு ஷாக் ஆனார்  துணை ஆணையர் விஜயகுமார்.   ஏனென்றால் துணை ஆணையர் விஜயகுமார் காஞ்சிபுரம் எஸ் பி யாக இருந்தபோது அவரிடம் பணி செய்தவர்தான் அமல்ராஜ். அந்த அறிமுகத்தில்  அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜைத் தொடர்பு கொண்டார்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்

”என்ன அமல்ராஜ் நல்லா இருக்கியா பேமிலி எப்படி இருக்காங்க?”  என்று  விஜயகுமார் கேட்க,  “ஐயா நல்லா இருக்கிறோம். நீங்க நல்லா இருக்கீங்களா?” என பதிலுக்கு நலம் விசாரித்தார் இனஸ்பெக்டர் அமல்ராஜ்.

”சரிங்க அமல்ராஜ் அரும்பாக்கம் லிமிட்டில் வங்கியில் கொள்ளைபோன நகைகள் உன் வீட்டில் இருக்கிறது.  நீங்களாகவே எடுத்து வந்து கொடுக்கறிங்களா  இல்ல,  நான் போலீஸ் டீம் அனுப்பிவிடவா?” என்று கேட்டுவிட்டு வைத்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள் திருட்டுத் தங்கம்!

உடனே பதறிப் போன  இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் அவரது மனைவி இந்திராவிடம் தகவலைச் சொல்லி, ‘என்னடி இது நம்ம வீட்ல எப்படி திருட்டு நகை இருக்கும்?” என்று டென்ஷனாக கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவரது மனைவி இந்திரா,  “அய்யய்யோ எனக்கு எதுவும்  தெரியாதுங்க. என் ஃபிரண்ட்  ஜெயந்திதான்  கொடுத்துட்டு போனா” என்று கூறியிருக்கிறார்.

பிறகு அந்த  7 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு போய் துணை ஆணையர் விஜயகுமாரிடம் கொடுத்துவிட்டு நடந்ததை வாக்கு மூலமாக கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ். அதன் பின் இன்ஸ்பெக்டராக இருக்கும் அமல்ராஜ் மீது சட்ட ரீதியான துறை ரீதியான நடவடிக்கைகள் பாய்ந்திருக்கின்றன.

வங்கி ஊழியர் முருகனிடமிருந்து 100 கிராமும் பாலாஜியிடமிருந்து 200 கிராம் நகையையும் பறிமுதல் செய்தனர் ஸ்பெஷல் டீம் போலீஸார்.

ஸ்ரீவாஸ்தவா கொடுத்த வாக்குமூலத்தில்,  “சூரியா, சந்தோஷ் குமார் இருவரும் நண்பர்கள். நிறைய  நகைகள் இருக்கு அதை உருக்கி வித்துக் கொடுக்கணும்னு கூப்பிட்டாங்க.அவ்வளவுதான் எனக்கு  வேறு எதுவும் தெரியாது”  என்று கூறியுள்ளார்.

துணை ஆணையர் விஜயகுமார்

தங்கமான போலீஸ் டீம்!

இப்படித்தான் தனியார் வங்கியில் கொள்ளை போன நகைகளை 36 மணி நேரத்தில் ரெக்கவரி செய்து குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம். இவர்களை தங்கமான போலீஸ் டீம் என்று பாராட்டுகிறார்கள் ஃபெட் வங்கியில் தங்கத்தை வைத்து தவித்துக் கொண்டிருந்து தற்போது நிம்மதியான மக்கள்.

-வணங்காமுடி

அரும்பாக்கம் வங்கி கொள்ளை : எத்தனை இடங்களில் எவ்வளவு தங்கம் மீட்பு – முழு விவரம்!

+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.