சென்னை அம்பத்தூரிலுள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்மில் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வருகிறது என்கிற தகவல் தெரிந்தவுடன் மக்கள் கூடியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, அருகிலுள்ள அம்பத்தூர் பழைய சி.டி.ஹெச் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் ஏடிஎம், கேஷ் டெபாசிட் மெஷின் ஆகிய இரண்டும் அந்த வங்கியின் அருகிலேயே இருக்கின்றன.
இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 3) அம்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் அந்த ஏடிஎம்மில் 8,000 ரூபாய் பணம் எடுத்திருக்கிறார். ஆனால், அவருக்கு 20,000 ரூபாய் பணம் வந்திருக்கிறது.
இதேபோல, இன்னொருவர் பணம் எடுத்தபோதும் அவருக்கும் அதிகமான பணம் வந்திருக்கிறது. ஏடிஎம்மில் 200 ரூபாய் எடுக்க முயன்றால், 500 ரூபாய் வரும் செய்தி அந்தப் பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
இந்த விவரம் வங்கி அதிகாரிகளுக்குத் தெரிவதற்குள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏடிஎம்மில் வந்து பணம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், தற்காலிகமாக ஏடிஎம்மை மூடி வைத்தனர்.
இந்த நிலையில் வங்கித் தரப்பில், “ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் கட்டு வைக்கவேண்டிய இடத்தில் தவறுதலாக 500 ரூபாய் கட்டு வைத்ததுதான் இந்தக் குளறுபடிக்குக் காரணம்.
தகவல் தெரிந்ததுமே, வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தை மூடி, தொழில்நுட்பக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்களும் அங்கு வந்து ஏடிஎம்மில் உள்ள பிரச்சினையை உடனடியாக சரிசெய்துவிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை ஆடிய ’காம் கேம்’- எடப்பாடிக்கு என்ன சின்னம்?