சென்னை விமான நிலையத்தில் விமானம் கடத்தலா?   கொஞ்ச நேரத்தில் முடிந்த ஆபரேஷன்!

தமிழகம்

 விமானக் கடத்தல் சம்பவங்கள் பற்றிய சினிமாக்கள் பார்த்திருப்போம். சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் விமானக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான்.

நம் நாட்டில் 99.99 சதவிகிதம் விமானப் போக்குவரத்து அமைதியாக நடந்து கொண்டிருக்கும் சூழலிலும்… எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக ஒருவேளை விமானம் கடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு.

விமானம் கடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், விமானத்திலும் விமான நிலையத்திலும் இருக்கும் பல்வேறு பிரிவினர் பின்பற்ற வேண்டிய  நிலையான இயக்க நடைமுறைகளை அறிந்துகொள்ளவும், செயல்திறன் மற்றும் தயார் நிலையை சோதிக்கவும், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 22) விமானம் கடத்தப்பட்டதாக ஒரு திடீர் திகில் பரவியது. பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்தில் திரண்டதை அறிந்து பயணிகள் திகைத்துவிட்டனர்.  பிறகுதான் இது ஒத்திகை என்று தெரியவந்தது. 
இந்த ஒத்திகையானது இன்று  (ஜூலை 22) சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டது. விமான நிலைய குழுத் தலைவரும், தமிழக உள்துறை  கூடுதல் செயலாளருமான எம். முருகன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

காவல்துறை, தொழிலக பாதுகாப்பு படை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் ஆணையம், பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். விமான நிலைய குழுத் தலைவர் முருகன், சென்னை விமான நிலைய இயக்குனர் ஷரத் குமார் ஆகியோர் ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக அனைத்து தரப்பினரருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஜூலை 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

திடீரென விமான ஓடுதளத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியோடு அணி வகுத்ததைப் பார்த்த பயணிகளும் மற்ற ஊழியர்களும் சில நிமிடங்கள் திக் திக்கில் மூழ்கினர். பிறகு இது ஒத்திகை என அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.