சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கே ஒன்றிய அரசிடமிருந்து நிதி வராததால், விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போதைக்கு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்படுவதாகவும் போதுமான நிதி கிடைத்ததும், எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மாநில அரசு நிதியுதவி அளித்து வரும் நிலையில், இப்போதைக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது கடினமாக இருக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் மற்றும் விரிவாக்கத் திட்டம், சென்னையில் 54 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சில ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இதற்கிடையே , 116 கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டாம் கட்டப் பணிகளுக்கான கட்டமைப்புகள் ரூ.61,843 கோடி செலவில் மதிப்பிடப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பணி குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டே ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.
விமான நிலையத்திலிருந்து 15.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை , மகாலட்சுமி காலனி, திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,080 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த ஆய்வறிக்கை தொடர்பாக ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
அத்துடன் ஏற்கனவே, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கான அனுமதி மற்றும் நிதி குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிகிறது. சர்வதேச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை மற்றும் மாநில அரசு அளித்த தொகையுடன் தற்போதைக்கு இரண்டாம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
எனவே , இந்த நேரத்தில், விமான நிலையம் – கிளாம்பாக்கம் விரிவாக்கத் திட்டத்துக்கு நிதியளிப்பதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கி, கட்டுமானப் பணிகளும் தொடங்கிவிடும். ஆனால், தற்போதைய நிலையில், இந்தத் திட்டம் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பதால் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்படலாம் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், “சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு மிகவும் முக்கியமான திட்டம் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி என்பது தடையாக இருக்கக் கூடாது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் எந்தவிதமாகவும் தாமதிக்காமல் மத்திய அரசு அதன் பங்கு நிதியை வழங்க வேண்டும்.
தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…