பயணிகள் கவனத்திற்கு… விமான சேவைகளில் மாற்றம் – முழு விவரம் இதோ!

Published On:

| By Minnambalam Login1

chennai airport flight

சென்னையில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை தின நிகழ்வுகளை ஒட்டி விமான அட்டவணை மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படை 1932 அக்டோபர் 8 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1950-ஆம் வருடம் தான் ‘இந்திய விமானப் படை’ என்று பெயர் மாற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி விமானப் படை தினத்தைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சிகளும், இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பும் நடைபெறும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், விமானப் படை தினத்தை டெல்லியில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி 2022 -ஆம் ஆண்டு சண்டிகரிலும், 2023 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் பிரயாக்ராஜிலும் இந்திய விமானப்படை கொண்டாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 92-வது இந்திய விமானப் படையின் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கான ஒத்திகை சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5 வரை இந்த ஒத்திகை தொடரும். இது சம்பந்தமாகச் சென்னை விமான நிலையம் செப்டம்பர் 30 தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் “ சென்னையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.

இதனால் சென்னை வான்வெளி அக்டோபர் 8ஆம் தேதி வரை விமானப்படை தினத்தின் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு மூடப்படும். அதனால் சென்னை விமான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின் படி அக்டோபர் 3 – காலை 10.45 முதல் 11 வரை, அக்டோபர் 4 – காலை 11 மணி முதல் மதியம் 1 வரை, அக்டோபர் 5 காலை 10.45 முதல் 11 வரை, மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை, அக்டோபர் 6 – காலை 11 மணி முதல் மதியம் 1 வரை, அக்டோபர் 7 – காலை 10.45 முதல் 11 வரை மற்றும் அக்டோபர் 8 – காலை 10.45 முதல் 11 மணி வரை விமானங்கள் தரையிறங்கவோ புறப்படவோ அனுமதிக்கப் படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

முன்னதாக இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான இந்திய விமானப் படை கமாண்டர் பிரேம் குமார் கூறுகையில் “ அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 வரை சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து 72 விமானங்கள் பங்குபெறும்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி, சென்னை தாம்பரம் இந்திய விமானப் படை நிலையத்தில் காலை 7.30 முதல் 11 மணி வரை ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இதற்கு அதிக அளவில் மக்கள் கூட்டத்தை வரவழைத்து உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!

“மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிகவினரின் ஆதரவே இல்லை”: தமிழிசை சௌந்தரராஜன்

’என் கையை பிடித்து ரஜினி சொன்னது இதுதான்’ : அப்பல்லோ மருத்துவர் சொக்கலிங்கம் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share