சென்னை: அடையாறு திருவிக பாலத்தில் திடீர் விரிசல் போக்குவரத்து பாதிப்பு!

தமிழகம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அமைச்சர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், முன் களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இடையறாது களப்பணியாற்றி வருகின்றனர். என்றாலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அடையாறின் திருவிக பாலத்தின் இரண்டு இடங்களில் தற்போது திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்து அடையாறு செல்லக்கூடிய பகுதியில் உள்ள திருவிக பாலம் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இதைக்கண்ட பொதுமக்கள் அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி, பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருமாறு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

இந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்ட விரிசலுக்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. திருவிக பாலத்தின் அருகே கழிவுநீர் செல்லக்கூடிய ராட்சத குழாய் ஒன்று செல்கிறது. ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்து பம்ப் செய்யக்கூடிய கழிவுநீர் இங்கிருந்து சென்னை பெருங்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாயில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் விரிசலுக்கு அடையாறு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடும் வெள்ளநீரே காரணம். தண்ணீரினால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு மேலே இருக்கக்கூடிய பாலம் மற்றும் சாலையின் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் ஏற்பட்டுள்ள திருவிக பாலத்துக்கு தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் வினய் நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர், ”விரைவில் இது சரி செய்யப்படும். 15 வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட கழிவுநீர் குழாயில் அடையாறு ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரின் அழுத்தத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாற்று பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.. 

-மஞ்சுளா 

தேங்கி நிற்கும் மழைநீர்… நெருங்கும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை!

“நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை”: கங்குலி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *